Posts

கடவுளிடம் நாம் செய்யும் ஜெபம் சில வேளைகளில் கேட்கப்படுவதில்லையே ஏன்?

Image
கடவுள் நம்மைவிட ஞானம் மிக்கவர். யார் யாருக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதை அவர் அறிவார். அவர் எப்போழுதும் நமக்கு நன்மையே செய்வார். சிலவேளைகளில் கடவுளின் திட்டம் மனித ஞானத்திற்கு எட்டுவதில்லை. ஆகவே கடவுள் நம் ஜெபத்தை கேட்காதவர் போல் நமக்குத் தெரிகிறது. சிலவேளைகளில் சுயநலத்தோடு ஜெபம் செய்கிறோம். அரசர் சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார். பொருட்செல்வமோ அல்லது படையோ, மேலும் அதிகாரத்தையோ அல்லது மேலும் அரசுகளையோ கேட்காததால் கடவுள் அனைத்தையும் அவருக்குக் கொடுத்தார். அல்லது கடவுளின் திட்டத்திற்கு மாறுபட்டு நம் எண்ணங்கள் அமைவதால் நம் ஜெபம் கேட்கப்படுவதில்லை. சில சமயங்களில் நம் ஜெபம் நேரடியாகக் கேட்கப்படாமல் வேறுவிதமாக நிறைவேற்றப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நம் ஜெபங்களைக் கேட்டருள்வார் என்ற ஆழ்ந்த விசுவாசமும் கடவுளின் அன்பும் பராமரிப்பும் நம் வாழ்வில் நிலைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையும் அனைத்திலும் கடவுளின் சித்தம் நிறைவேற்றப்படவும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

எந்த நிலையில் ஜெபம் செய்யவேண்டும்? முழந்தாள்படியிட்டு? கைகூப்பி?

Image
விவிலியத்தில் மக்கள் ஜெபம் செய்யும் போது பல்வேறு நிலைகளில் ஜெபிக்கின்றதைக் காண்கிறோம். நின்றுகொண்டு, கைகளை உயர்தி, கவிழ்ந்து, உட்கார்ந்து, முழந்தாள்படியிட்டு ஜெபித்திருக்கிறார்கள். எந்நிலையிலும் ஜெபிக்கலாம் என்றாலும் முடிகின்ற சூழ்நிலைகளில் முழந்தாள் படியிட்டு கைகூப்பி ஜெபிப்பது கடவுளுக்கு முன் நமது தாழ்ச்சியையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வண்ணமாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையாக, பயபக்தியோடு ஜெபிப்பது உகந்தது.

கடவுள் நம் தேவைகளையும் அறிந்திருப்பவர். பின்னர் நாம் ஏன் நம் தேவைகளுக்ககாக ஜெபிக்க வேண்டும்? ஏன்

Image
நாம் ஜெபம் செய்யும் போது தாழ்ச்சியான உள்ளத்தையும் கடவுள் முன் நம்முடைய இயலாமையையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு செய்வது கொடுத்துக்கொண்டே இருக்கின்ற கடவுளின் கொடைகளை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும் கருவியாக ஜெபம் அமைகின்றது. ஆகவே நாம் தொடாந்து ஜெபம் செய்ய வேண்டும்.

கடவுளாகிய இயேசு ஏன் ஜெபம் செய்தார்?

Image
இயேசு கடவுளும் மனிதனுமானவர்.  இந்த உலகில் இயேசு முழு மனிதனாக அவதரித்தார். அவர் கடவுளாயிருந்தாலும் இந்த உலகின் மனிதரைப் போல் மனிதராக வாழ்ந்தார். அவர் இறை தந்தையைச் சார்ந்து வாழ்ந்தார். எல்லாவற்றிலும் இறை தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றார். இறை தந்தையை முழுமையாக அன்பு செய்து அவரில் வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு உரையாடுவதில் அதிக நேரத்தை கழிக்கின்றதை நாம் நற்செய்திகளில் காண்கின்றோம்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா?

Image
இல்லை. சிலைவழிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட சிலைக்கு சக்தி இருக்கிறது என்று நம்பி அந்த சிலையை தெய்வமாக வழிபடுவது. கத்தோலிக்க ஆலயங்களில் நிறுபப்பட்டிருக்கும் சுரூபங்கங்கள் (சொரூபம் - மாதிரி) இயேசுவை அல்லது அந்தந்த புனிதர்களை நம் நினைவில் கொண்டுவர, தியானிக்க, அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த சுரூபங்களுக்கு சக்தி இருப்பதாகவோ அல்லது அவைகளையே கடவுளாகவோ நாம் வழிபடுதில்லை. புனிதர்களை நாம் நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். புனிதர்கள் கடவுள் அல்ல. புனிதர்களுக்கு, அன்னை கன்னிமரியாள் உட்பட அனைவருக்கும் நாம் வணக்கம் மட்டுமே செலுத்துகிறோம். புனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்கை வாழ்ந்து மரித்தவர்கள்(உம் - அன்னை தெரசா). புனிதர்கள் இறைவனோடு விண்ணகத்தில் இருப்பதால் புனிதர்களிடம் நாம் நமக்காக இறைவனிடம் பரிந்துபேச அழைப்பு விடுவிக்கின்றோம்.

யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? கடவுளிடமா? இயேசுவிடமா? தூய ஆவியிடமா? புனிதர்களிடமா?

Image
நாம் கடவுளிடமோ அல்லது யேசுவிடமோ அல்லது தூய ஆவியிடமோ ஜெபம் செய்யலாம்.இந்த மூவரிடமும் எழுப்பப்படும் ஜெபங்கள் விவிலியத்தில் அனேக இடங்களில் காணப்படுகின்றன. கடவுள் ஒருவர்தான். இயேசுவிடம் ஜெபம் செய்யும் போது இறைத் தந்தையிடமும் நாம் ஜெபம் செய்கிறோம். நாம் ஜெபம் செய்யும் வார்த்தைகளையும் கடந்து கடவுள் நம் உள்ளத்தையும் எண்ணங்களையும் அறியக்கூடியவர். புனிதர்கள் கடவுள் அல்ல. அவர்கள் கடவுளின் விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்கள். தங்களின் தூய வாழ்வால் விண்ணகத்தை சுதந்தரித்துக் கொண்டவர்கள். அவர்கள் இறைவனின் அருகில் அமர்ந்திருக்கிறார்கள், நமக்காக கடவுளிடம் பரிந்து பேசுகிறார்கள், நாம் செய்யும் வேண்டுதல்களை கடவுளிடம் மன்றாடி நமக்குப் பெற்றுத் தருகிறார்கள் என்பதே நமது விசுவாசம்.

எதற்காக ஜெபம் செய்ய வேண்டும்?

Image
கடவுளின் அருகில் நாம் நெருங்கிவர ஜெபம் நமக்குத் துணைசெய்கிறது. கடவுளிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றிசொல்லும் போதும், அவர் புகழ் பாடும் போதும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போதும், நமது பலகீனத்தில் அவரது உதவியை நாடும் போதும், அவர் சித்தத்தை நிறைவேற்றும் போதும், கடவுள் நம்மோடு பேசுகிறார். கடவுள் நமது சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யத் தூண்டுகிறார். நாம் ஜெபம் செய்வதன் மூலம் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற அதிக வாய்ப்பை நமக்குக் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் கடவுளில் இணைந்து வாழும் பேற்றைப் பெறுகிறோம். முத்திப்பேறு பெற்ற அன்னைத் தெராசாவும் மற்ற புனிதர்களும் இப் பேற்றைப் பெற்றவர்களே.

ஜெபம் என்பது என்ன?

Image
கடவுளோடு உரையாடுவது ஜெபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே ஜெபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே ஜெபம்.

திருச்சபையின் மேன்மைக்காக பிதாவாகிய சர்வேசுரனை நோக்கி ஜெபம்

Image
நித்திய பிதாவே!  தேவரீர் ஆதியிலேதானே உமக்குச் சொந்தமாய் ஏற்றுக் கொண்ட திருச்சபையை நினைத்தருளும் சுவாமி.  உம்முடைய ஏக சுதனாகிய சேசுகிறீஸ்துநாதர் தமது திரு இரத்தமெல்லாம் சிந்திச்  சுதந்தரித்துக் கொண்ட பரிசுத்த திருப்பத்தினி அதுதான் என்று எண்ணுவீராக.  அது தன்னுடைய திவ்விய பத்தாவுக்கும், தன்னை மீட்ட விலைமதியாத கிரயத்துக்கும் பாத்திரமானதாய் விளங்கத்தக்கதாக, தேவரீர் அதை மேன்மைப்படுத்தி, அர்ச்சியசிஷ்டதன சோதிக்கதிரால் பிரகாசிக்கச் செய்து, மிகுதியான தேவ இஷ்டப்பிரசாதங்களால் பூரிப்பித்தருள வேண்டுமென்று தேவரீரை ஆசைப் பெருக்கத்துடனே மன்றாடுகிறோம். அதன் பிள்ளைகளான சகலரும் பற்றுதலுள்ள விசுவாசத்துடனே தேவரீரை அறிந்து அனுசரித்து, உறுதியான நம்பிக்கையுடனே தொழுது மன்றாடி, உத்தம சிநேகத்துடனே நேசித்துச் சேவிக்கச் செய்தருளும் சுவாமி.   ஆமென். 

காணிக்கை ஜெபம்

Image
இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.