உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்க மாதம்



*உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது.. எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது*

_தியானம்:_ 

இந்தக் கடைசி தியானத்தில், நமது நினைவினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி நமது விசுவாசமாகிய ஞானக்கண்ணால் அதிலே அகோரமாய் எரியும் நெருப்பைக்கண்டு, அங்கே வெகுவாய் வருத்தப்படுகிற ஆத்துமாக்களைத் தரிசித்து, அதனால் நமக்கு யாதொரு சுகிர்த பிரயோசனத்தைத் தேட வேணும். இந்தத் தியானத்தினால் அநேக பெரும் பாவிகள் மனந்திரும்பினதுமன்றியே, தேவ ஊழியத்தில் அசட்டையாயிருந்தவர்களில் அனேகர் ஞானச் சுறுசுறுப்படைந்து உத்தம கிறிஸ்துவர்ளானார்களென்கிறது சரியே. 

கிறிஸ்துவர்களே! நீங்களும் முன் தியானங்களில் சொன்னதைச் சுருக்கமாய்த் தியானிப்பதற்காகவும் உங்கள் பக்தியை எப்போதும் தூண்டி விடுகிறதற்காகவும் பின் வரும் புத்திமதிகளை தெரிந்து கொள்ளவேணும்:

முதலாவது சர்வேசுரனாலே உண்டாக்கப்பட்டு நமது ஆண்டவரான சேசுநாதருடைய திவ்விய இரக்கத்தினால்
மீட்டிரட்சிக்கப்பட்ட அந்த ஆத்துமாக்கள் அவ்வளவு கடின வேதனைகளால் உபாதிக்கப் படுகிறதற்கு முகாந்தரமென்ன ? அவர்கள் பூலோகத்தில் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கும் செய்ய வேண்டிய பரிகாரமே, இந்த வேதனைகளுக்குக் காரணமல்லாமல் வேறல்ல. இது இப்படியிருக்க இப்படிப்பட்ட வேதனைகளை வருவிக்கும் பாவங்களைக் சொற்பமென்று கருதி அவைகளை அச்சமின்றிப் பயமின்றிச் செய்யக்கூடுமோ?

இரண்டாவது எந்த பாவத்துக்கும் தேவ நீதியின் படியே பரிகாரம் செய்ய வேண்டுமென்பது சத்திய விசுவாசமல்லவோ ? இவ்வுலகத்திலே தான் அந்தப் பரிகாரத்தை , ஜெப தப தான தருமங்களினாலும் ,திருச்சபையின் பலன்களினாலும் நேரிடுகிற பற்பல துன்பங்களைப் பொறுமையோடு அனுபவிப்பதினாலும், வெகு எளிதாய்ப் பண்ணலாம். அப்படிச் செய்யாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மனோவாக்குக்கு எட்டாத வேதனைப்பட்டு அந்த பரிகாரத்தைச் செய்ய வேண்டியதாயிருக்குமென்பது தப்பாது. இது குன்றாத சத்தியமென்றறிந்து, நீங்கள் மென்மேலும் அதிக பக்தியோடும் சுறுசுறுப்போடும் உங்களாலான நற்கிரியைகள் எல்லாவற்றையும் நடப்பிக்கிறதுந் தவிர, வருகிற எல்லாப் பொல்லாப்புகளிலும் சலியாத பொறுமையை அநுசரிக்க வேணுமல்லவோ? 

 மூன்றாவது: எந்த மனுஷனுக்கும் பிரியப்பட வேணுமாகில் அவனுடைய பிள்ளைகளை நன்றாய் விசாரிக்க வேணுமென்பார்களே. அவ்வண்ணமே அவ்வளவு கடின ஆக்கினைகளைப்படுகிற அந்த ஆத்துமாக்கள் சர்வேசுரனுக்கும் சேசுகிறிஸ்துநாதருக்கும் மிகவும் உகந்த ஆத்துமமாக்களாகையால் அவர்களை மீட்டிரட்சிக்கப் பிரயாசைப்படுவது உத்தம தேவ சிநேகந்தான். அந்த ஆத்துமாக்களை மறந்து அவர்களுக்கு உதவிசகாயம் பண்ணாத மனுஷன், தான் சர்வேசுரனைச் சிநேகிக்கிறேனென்றால் தன்னைத்தானே ஏய்க்கிறானொழிய மற்றப்படியல்ல. மகனை நெருப்பிலே வேகவிடுவாயானால் அவனுடைய தகப்பனை நேசிக்கிறேனென்பாயோ? மேலும், சர்வேசுரன் உனக்குச் செய்த உபகாரங்களை மறந்தாயோ? நீ கட்டிக்கொண்ட பாவங்கள் எத்தனையென்று அறிவாயோ? அடைந்த உபகாரங்களுக்கு நன்றியறிதலைக் காண்பிக்கவும், பண்ணின துரோகங்களுக்கு மன்னிப்பை அடையவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருப்பது உத்தம வழியல்லவா?

நான்காவது : அவ்வளவான வேதனைகளைப்படுகிற ஆத்துமாக்களைக் கண்டு, அவர்கள் புலம்புகிற புலம்பல்களையும் இடுகிற அபயக் குரல்களையும் கேட்டு புலி முதலாய் இரங்குமே. உங்களுக்குமாத்திரம் இரக்கமில்லாமற். போகுமோ அந்த ஆத்துமாக்கள் அகோர நெருப்பிலே வேகும்போது நீங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடலாமா? அந்த ஆத்துமாக்கள் இவ்வளவு துன்பப்படும்போது உங்களுக்கு நன்றாயிருக்குமோ?

ஐந்தாவது: உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்களுக்கு நானாவித நன்மை பிரயோஜனம் வருமென்பது நிச்சயமாகையால், உங்களுக்கு வரக்கூடிய சொந்த ஆதாயத்தைப் பற்றியாவது அந்த ஆத்துமாக்களுக்கு வேண்டிய முயற்சியைப் பண்ணுங்கள். நீங்கள் இவ்வுலகத்தில் படுகிற சோதனைகளில் மோசம்போகாமலும், வருகிற துயரங்களில் கலங்காமலும், நேரிடுகிற பொல்லாப்புகளில் மயங்காமலும், நன்னெறியிலே வழுவாதொழுகி நன் மரணமடைந்து, பேரின்ப வீட்டுக்குப் போவோமென்று உறுதியான நம்பிக்கை உங்களுக்கு உண்டாயிருக்க வேணுமானால் அந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருங்கள்.

ஆறாவது: உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண அநேக நல்ல வழிகளிருப்பதால் வருத்தமின்றித் துன்பமின்றி அவர்களுடைய வேதனைகளை அமர்த்தித் தணித்துக் குறைத்து முடியச் செய்யலாமே. நீங்கள் தினந்தினம் வழக்கமாய்ச் செபிக்கும் ஜெபங்களையும். நடத்தும் நற்கிரியைகளையும் தகுந்த கருத்தோடே செய்வீர்களேயானால், எத்தனையோ பலன்களையும் ஞானத்திரவியங்களையும் அடையக்கூடுமே. அப்படியிருக்க அவைகளை உங்களுடைய அசட்டையினாலே இழந்து போய், ஆத்துமாக்களுக்கு வரக்கூடிய உதவி சகாயத்தைத் தடுக்கிறீர்களே. இது பெரிய அநியாயமல்லவோ?

ஏழாவது அந்த ஆத்துமாக்களுக்கு உங்களாலான , உதவிசகாயமெல்லாம் பண்ணவேணுமென்று உங்களுக்கு அதிக ஆசையாயிருக்கிறதோ, முன் சொன்னவண்னமே நீங்கள் அடையக்கூடிய பரிகாரப்பலன் யாவற்றையும் அவர்களுக்கு முழுமையும் நேர்ச்சி செய்துவிடுங்கள். அப்படிச் செய்பவர்களுக்கு இம்மையிலேயும் மறுமையிலேயும் தாங்கள் கொடுத்ததற்கு ஒன்றுக்கு நூறாகக் கொடுக்கப்படுமென்கிறதை ஒரு போதும் மறவாதேயுங்கள்.

எட்டாவது கடைசியிலே எந்தப்பிரகாரமாய் அந்த ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ணியிருப்பீர்களோ அந்தப்பிரகாரமாய்த்தானே நீங்களும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படுகிறபோது உங்களுக்கு செய்யப்படும். உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கொஞ்சம் உதவி சகாயம் மாத்திரம் வருவிக்க விரும்புவீர்களேயானால், உங்களுக்கும் கொஞ்சம் உதவிசகாயந்தான் வருமென்பது நிச்சயமாகையால், இனிமேல் உங்களுக்கு வேண்டியதை இப்போதே சேகரித்துக் கொள்ளுங்கள். 

கிறிஸ்துவர்களே ! நெருப்பிலே விறகு போடாதே போனால் நெருப்பு அவிந்து போகுமே. அவ்வண்ணமே இந்த மாதத்திலே உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் உங்களிடத்தில் பற்றுவித்த பக்தியானது குறைந்து அவிந்துபோகாதபடிக்கு வருஷத்தில் வரும் அந்தந்த திங்கட்கிழமைகளிலே இப்போது சொன்ன தியானங்களில் ஒவ்வொன்றாய் வாசிக்க வேணுமென்று அறியக் கடவீர்களாக.

_இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்:_ 

அர்ச் மரியாயின் மாசற்ற இருதயமே ! எனக்கு ஆதரவாய் இரும்.

_செபம்:_ 

எங்களுடைய உத்தம ஏக நன்மையாகிய சேசுவே ! தேவரீர் எங்கள் பாவங்களை உம்முடைய திருத்தோளின் பேரில் சிலுவையோடு சுமந்தீரே , இந்த மட்டில்லாத உபகாரங்களைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்யும். விசேஷமாய் ஆறுதலற்றிருக்கிறவர்கள் பேரில் அதிகமாய் இரங்கி அவர்களுக்கு விரைவில் மோட்ச வாசலைத் திறக்க அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

_முப்பதாம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:_

*உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பக்தியோடு தேவநற்கருணை வாங்குகிறது.*

 _மரித்த விசுவாசிகளுடைய ஆன்மாக்கள் சர்வேசுவரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது. ஆமென்._


Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு