புனித அருளானந்தருக்குச் செபம்
கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்.
புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர்.
ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம தாகமும், உயிரையும் பொருட்படுத்தாத தீரமும் உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவின் மந்தையைச் சேராத எத்தனையோ இலட்சம் ஆடுகள் இந்நாட்டில் உண்டு. அவர்களுக்கெல்லாம் வழிகாட்டி ஒளியேற்ற இன்னும் பல குருக்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய ஆண்டவரை மன்றாடியருளும். தவிர, துன்பத்தாலும் நோயாலும் வறுமையாலும் நலிந்து வாழும் ஏழை மக்கள் மீதும்; இரக்கமாயிரும். அனைவர் நடுவிலும் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் நிலைத்து நிற்பனவாக!
இறுதியாக, புனித அருளானந்தரே, எங்கள் ஆயர்கள், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரையும் உமது பாதுகாவலில் வைக்கிறோம். அவர்கள் எல்லாரும் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் அன்பில் எல்லா நலன்களையும் பெற்று, பரம தந்தையின் திருவுளத்துக்கு அமைந்து, புனிதர்களாய் வாழ்ந்து, என்றும் மாறாத பேரின்ப வாழ்வுக்கு வந்து சேரச் செய்தருளும். ரூனெயளர் ஆமென்.
Comments