குழந்தை இயேசு நவநாள்

தொடக்கப் பாடல்:

அற்புதக் குழந்தை இயேசுவே! அடியோர் மேல் இரக்கமாயிரும். (மும்முறை)

தொடக்கச் செபம்:

அற்புதக் குழந்தை இயேசுவே! எங்களை ஆசீர்வதித்து வரவேற்கக் கரம் விரித்துக் காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவி புரியும். நீரே எங்கள் ஆண்டவர். நீரே எங்கள் மீட்பர். எங்களைப் பற்றி உமக்கு அதிக அக்கறை உண்டு. எங்கள் மன்றாட்டுக்களைக் கேட்க நீர் எங்களோடு எப்போதும் இருக்கின்றீர். எனவே, எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து, எங்கள் மன்றாட்டுக்களைக் கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமை மிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு கெஞ்சிக் கேட்கிறோம். தந்தையோடும், தூய ஆவியாரோடும், இறைவனாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி புரியும் இயேசுவே. ஆமென்.

விண்ணப்பச் செபம்:

அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம், எங்கள் செபத்தைக் கனிவோடு ஏற்று, உருக்கமாக நாங்கள் மன்றாடிய இந்த வரங்களை அளித்தருளும்படி உம்மைப் பணிவோடு கெஞ்சி மன்றாடுகிறோம். எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி, உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியாரோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்ற அருள் புரியும். ஆமென்.

விண்ணப்பங்கள்:

முத: பரிவிரக்கமுள்ள தந்தையே! உமது அன்புத் திரு மகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து எங்களுக்கு வேண்டியவையெல்லாம் அவருடைய பெயராலே உம்மிடம் நம்பிக்கையோடு கேட்குமாறு எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதே நம்பிக்கையோடு இங்கு கூடியிருக்கும் உம் மக்களின் மன்றாட்டுக்களைக் கேட்டருள உம்மிடம் வேண்டுகிறோம்.
எல்: அற்புதக் குழந்தை இயேசுவே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முத: எங்கள் திருத்தந்தைக்காகவும், ஆயர்களுக்காகவும், குருக்களுக்காகவும், துறவியருக்காகவும் வேண்டுகிறோம்: திருச்சபையின் வளமைக்கு உதவும் வற்றாத ஊற்றாக இவர்களின் வாழ்க்கை அமைய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்…
எல்: அற்புதக் குழந்தை இயேசுவே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முத: நாங்கள் வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொண்ட அனைவருக்காகவும் வேண்டுகிறோம்: நன்றி கூறி உம்மை வாழ்த்திப் போற்றும் நல்ல உள்ளத்தை எங்களுக்கு அளிக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்…

எல்: அற்புதக் குழந்தை இயேசுவே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


முத: நோயாளிகளுக்காகவும், திக்கற்றவர்களுக்காகவும், சோர்ந்திருப்போருக்காகவும் வேண்டுவோம்: இவர்களுக்கெல்லாம் ஆறுதலின், ஆதரவின் பிறப்பிடமாகத் தெய்வத் திருக்குழந்தையாகிய நீரே இருக்க வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்…

எல்: அற்புதக் குழந்தை இயேசுவே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


முத: யார் யாருக்குத் தனிப்பட்ட வரங்கள் தேவையோ அவர்களுக்காக வேண்டுவோம்: இவர்களின் எளிய விசுவாசத்தை ஆசீர்வதித்து தம் திருவுளப்படி தெய்வத் திருக்குழந்தை, இவர்களின் விண்ணப்பங்களை அளித்தருள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்…

எல்: அற்புதக் குழந்தை இயேசுவே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


முத: குழந்தை இயேசுவின் பக்தர்கள் அனைவருக்காகவும் வேண்டுவோம்: குழந்தை இயேசு உயிருள்ள விசுவாசத்தை இவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்…

எல்: அற்புதக் குழந்தை இயேசுவே! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


(நம் சொந்தத் தேவைகளுக்காக உறுதியோடு அமைதியாக செபிப்போம்)


முத: தந்தையே! உம் திருமகன் குழந்தை இயேசு வழியாக எங்கள் மன்றாட்டுக்களை கேட்டருளியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். வாழ்வில் என்றுமே உமது திருவுளத்தை ஏற்று வாழும் வரமருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.


நன்றியறிதல்:

வானகத் தந்தையே! எங்கள் மீட்பராம் அற்புதக் குழந்தை இயேசுவின் பிறப்பில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். மனுக்குலத்திற்கு நீர் அருளிய மாபெரும் கொடை அவரே. அவரின் வாழ்வும், இறப்பும், உயிர்ப்பும் இவ்வுலகில் எங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பாதுகாப்பளித்து, மறுவுலகில் முடிவில்லாப் பேரின்பத்தை அளிப்பதாக. எங்கள் ஆண்டவராகிய அற்புதக் குழந்தை இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.


நோயாளிகளுக்காக செபம்:

எங்கள் தந்தையாகிய இறைவா! பாவத்திலிருந்து எங்களை மீட்கவும், துன்பத்திலிருந்து எங்களை விடுவிக்கவும், உம் திருவுளப்படி ஒரு சிறு குழந்தையாக உம் திருமகன் எங்களிடையே தோன்றினார். எல்லா நோயாளிகளுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். உமது சித்தப்படி இவர்களின் வேதனையை நீக்கி நோயை குணமாக்கியருளும். உமது இரக்கத்தால், உள்ளத்திலும் உடலிலும் இவர்கள் நலம் பெற்று, மீண்டும் உமக்கு நன்றி செலுத்துவார்களாக. தந்தையாகிய உம்மோடும், தூய ஆவியோடும் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்யும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய குழந்தை இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.


இரக்கமுள்ள தந்தையே! உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுக் கிறிஸ்து, தம்மை நாடி வந்த நோயாளிகளின் துயரைக் கண்டு மனமிரங்கினார். நோயாளிகளும், உடல் குறையுற்றவர்களும், தீராத நோயால் துன்புறுவோரும், கனிவான அவரது கரம் தொட்டவுடனே குணம் அடைந்தனர். இங்கே கூடியிருக்கும் நோயாளிகள் அனைவரையும் அதே அன்புக் கரத்தால் தொட்டு குணமாக்க வேண்டுமென்று தாழ்ந்த உள்ளத்தோடு உம்மை மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் உடலிலும் உள்ளத்திலும் முழு நலம் பெற்று உம்மைப் போற்றி மகிழ்வார்களாக. எங்கள் ஆண்டவராகிய அற்புதக் குழந்தை இயேசு வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இறை ஆசீர் பெறுதல்:

நாம் அனைவரும் சிரம் தாழ்த்தி இறைவனின் ஆசியை இறைஞ்சுவோம். இறைவனின் திருமகனாகிய அற்புதக் குழந்தை இயேசு, நம் பாவ இருளை அகற்றி, மகிழ்ச்சி ஒளியால் நம் உள்ளத்தை நிரப்ப இவ்வுலகத்திற்கு வந்தார். மனுவுருவான வார்த்தையானவர் நமக்கு அமைதியையும், ஆசியையும், அக்களிப்பையும் அளித்து, நம் அனைவரையும் நட்புறவில் ஒன்றாய் இணைப்பாராக. இறைவனின் ஆவி நம்மை ஒரே குடும்பமாய் இவ்வுலகில் இணைத்து, நிலைவாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்வாராக. ஆமென்.


ஆற்றலுள்ள குழந்தை இயேசுவுக்கு நவமணி செபம்:

(ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, மணிக்கு ஒருமுறையாக 9 முறை குழந்தைக்குரியப் பற்றுதலோடு தொடர்ச்சியாக செபிக்க வேண்டும்ம்)


ஓ இயேசுவே! “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.” என்று மொழிந்தீரே. உமது தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக நான் கேட்கிறேன், தேடுகிறேன், தட்டுகிறேன். நான் கேட்கும் இந்த வரங்களைக் கொடுத்தருளுமாறு பணிவுடன் மன்றாடுகிறேன்.


ஓ இயேசுவே! “என் பெயரால் நீங்கள் தந்தையைக் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருளுவார்” என்று மொழிந்தீரே. உமது தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக எனக்கு அவசரமான இந்த மன்றாட்டை அளித்தருளமாறு, உமது பெயரால் தாழ்ந்த உள்ளத்துடன் தந்தையை கெஞ்சி மன்றாடுகிறேன்.


ஓ இயேசுவே! “விண்ணும் மண்ணும் அழிந்து போகும். ஆனால் என் சொற்களோ ஒருபோதும் அழியா” என்று மொழிந்தீரே. உமது தாயாகிய தூய கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக என் செபம் கேட்கப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆமென்.


குழந்தை இயேசு செபமாலை

செபமாலையின் அமைப்பு:

திருக்குடும்பத்தின் மகிமைக்காக மூன்று கர்த்தர் கற்பித்த செபம்.


முத: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெருக! உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக.

எல்: எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.


நம் மீட்பருடைய குழந்தைப் பருவத்தின் பன்னிரு ஆண்டுகளின் நினைவாக பன்னிரு மங்கள் வார்த்தை செபம்.


முத: அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே.

எல்: தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும்.ஆமென்.


மூவொரு இறைவனின் மகிமைக்காக மூன்று மூவொரு இறைவன் புகழ் செபம்.


முத: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.

எல்: தொடக்கத்திலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.


செபிக்கும் முறை:

ஒவ்வொரு கர்த்தர் கற்பித்த செபத்திற்கு முன்னால்:

“வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்”


ஒவ்வொரு மங்கள வார்த்தை செபத்திற்கு முன்னால் இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றித் தியானிக்க வேண்டிய மறை உண்மைகள்:

1. இயேசு பிறப்பின் அறிவிப்பு

2. தூய மரியாள் எலிசபெத்தின் சந்திப்பு

3. இயேசுவின் பிறப்பு

4. இடையர்களின் ஆராதனை

5. இயேசுவின் விருத்தசேதனம்

6. ஞானிகளின் ஆராதனை

7. இயேசுவைக் காணிக்கையாக்குதல்

8. எகிப்து நாட்டிற்குப் பயணம்

9. எகிப்து நாட்டில் தங்குதல்

10. எகிப்து நாட்டிலிருந்து திரும்புதல்

11. நசரேத்தூரில் இயேசுவின் வாழ்க்கை

12. மறைநூல் அறிஞர்களுக்கிடையே இயேசு

செபம்:

குழந்தை இயேசுவே! உமது ஒப்பற்ற வல்லமையை வியத்தகு முறையில் வெளிப்படுத்தி, உமது அற்புதத் திருக்கரத்தின் ஆசீரால் எங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்புகின்றீர். நம்பிக்கையோடு உம்மைக் கூவி அழைக்கும் எங்களின் மன்றாட்டுக்களுக்குக் கனிவாய் செவிசாய்த்தருளும். ஆமென்.


குறிப்பு:

இச்சிறு செபமாலை பக்தித் தமக்கு எவ்வளவு பிரியமானது என்பதை தூய மார்கரெட் அம்மாளுக்கு அறிவிக்கக் குழந்தை இயேசு அருள் கூர்ந்தார். இதை பக்தியோடு செபிப்பவர் கற்பு, தூய்மை என்ற வரங்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.


பெற்றோரே! உங்கள் பிள்ளைகளின் திருமுழுக்குத் தூய்மையைக் களங்கமின்றிக் காப்பாற்ற, இப்பக்திப் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். குழந்தை இயேசுவை தங்கள் முன் மாதிரியாகக் கொண்டு அவரை அன்பு செய்யவும், அவரைப் பின்பற்றவும், இச்செபமாலை பக்தி அவர்களுக்குச் சிறந்த தற்காப்புச் சாதனம் என்பதை உணரச் செய்யுங்கள்.


குழந்தை இயேசு புகழ் மாலை

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…

எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்

முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…

எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…

எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.


முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளும்.

முத: வானகத் தந்தையாகிய இறைவா…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: உலகை மீட்ட மகனாகிய இறைவா…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தூய ஆவியாகிய இறைவா…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: மூவொரு கடவுளாகிய இறைவா…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.


(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று சொல்லவும்)


முத: அற்புதக் குழந்தையாகிய இயேசுவே…

முத: வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய ற்புதக் குழந்தை இயேசுவே…

முத: உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: நரகத்தை வெல்லும் திறமையுள்ள அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள அற்புதக் குழந்தை இயேசுவே…

உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய அற்புதக் குழந்தை இயேசுவே…

முத: உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள அற்புதக் குழந்தை இயேசுவே…


முத: கருணை கூர்ந்து…

எல்: எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே.

முத: கருணை கூர்ந்து…

எல்: எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.

முத: எல்லாத் தீமையிலிருந்து…

எல்: எங்களை மீட்டருளும் இயேசுவே.

முத: எல்லாப் பாவத்திலிமிருந்தும், அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்தும்…

எல்: எங்களை மீட்டருளும் இயேசுவே.

முத: அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லா சந்தேகத்திலுமிருந்தும்…

எல்: எங்களை மீட்டருளும் இயேசுவே.

முத: உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்தும்…

எல்: எங்களை மீட்டருளும் இயேசுவே.

முத: எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்தும்…

எல்: எங்களை மீட்டருளும் இயேசுவே.


முத: உமது கன்னித் தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூய யோசேப்பு, இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: உமது திருக்குழந்தைப் பருவத்தின் மேல் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: உமது அற்புதத் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: உமது எண்ணற்ற நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: உம்மை நம்பிக்கையோடு கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: எங்கள் நாடு என்றும் அமைதியில் நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நிலைவாழ்வை அளித்தருள வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: இறுதித் தீர்வை நாளிலே எங்களை இரக்கத்துடன் தீர்ப்பிட வேண்டுமென்று…

முத: உமது அற்புதத் திரு உருவத்தின் வழியாக நீர் எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் இருக்க வேண்டுமென்று…

எல்: உம்மை மன்றாடுகிறோம்.

முத: இறை மகனே, மரியின் மகனே, இயேசு கிறிஸ்துவே!

எல்: உம்மை மன்றாடுகிறோம்.


முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…

எல்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…

எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…

எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.


முத: செபிப்போமாக: அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி மன்றாடுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம், எங்கள் செபத்தைக் கனிவோடு ஏற்று, உருக்கமாக நாங்கள் மன்றாடும் இந்த வரங்களை அளித்தருளுமாறு பணிவோடு உம்மைக் கெஞ்சிக் கேட்கிறோம். எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும், வேதனைச் சோதனைகளையும் நீக்கி, உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியாரோடும் என்றென்றும் நாங்கள் உம்மை வாழ்த்திப் போற்ற வரம் அருளும்.

எல்: ஆமென்.


நன்றி மன்றாட்டு:

கனிவுள்ள அற்புதக் குழந்தை இயேசுவே! நீர் என் மேல் பொழிந்தருளிய எல்லா நன்மைகளுக்காகவும் முழந்தாளிட்டு உமக்கு மனம் நிறைந்த என் நன்றியைச் செலுத்துகிறேன். உமது இரக்கத்தை நான் என்றும் போற்றிப் புகழ்வேன். நீர் ஒருவரே என் இறைவன், என் துணைவன் என்று நான் பறைசாற்றுவேன். என் நம்பிக்கை எல்லாம் நான் உம்மிலே வைக்கிறேன். உமது இரக்கத்தையும், உமது வள்ளல் தன்மையையும் நான் எங்கும் பறைசாற்றுவேன். உமது பேரன்பையும், அரும்பெரும் செயல்களையும் எல்லோரும் ஏற்றிப் போற்றுவார்களாக. அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தி மக்கள் உள்ளங்களில் அதிகமதிகமாகப் பரவுவதாக. உமது உதவியை பெற்று மகிழும் அனைவரும் உமது குழந்தைப் பருவத்திற்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்களாக. என்றென்றும் அவர்கள் உம்மைப் போற்றி மகிமைப் படுத்துவார்களாக. ஆமென்.


அர்ப்பண மன்றாட்டு:

இனிய அற்புதக் குழந்தை இயேசுவே! உமது குழந்தைப் பருவத்தின் மேன்மையை வியந்து, உம்மை நான் ஆராதிக்கிறேன், அன்பு செய்கிறேன், மகிமைப் படுத்துகிறேன். நீர் என் மீது கொண்ட அன்பால் எனக்காக ஒரு சிறு குழந்தையாகப் பிறந்தீர். எனவே நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். அந்த அன்புக்குப் பதிலன்பாக என்னை முழுவதும் உமக்குக் கையளித்துக் காணிக்கையாக்குகிறேன். இப்பொழுதும் எப்பொழுதும், என் வாழ்நாள் முழுவதும் உம் திருக்குழந்தைப் பருவத்தின் புண்ணியங்களை எனக்கு அளிக்குமாறு உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். அன்புள்ள இயேசுவே! உமது தாழ்ச்சியையும், கீழ்ப்படிதலையும், எளிமையையும் எனக்குத் தந்தருளும். உம்மை அன்பு செய்யவும், உம்மைப் பின்பற்றி வாழவும், விண்ணகத்தில் உமது தெய்வீகத்தைக் கண்டுகளிக்கவும் உமது அருள் எனக்கு என்றும் துணை நிற்பதாக. ஆமென்.


துன்ப வேளையில் மன்றாட்டு:

அற்புதக் குழந்தை இயேசுவே! எங்களோடு வாழ்வதும், எங்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப் பொழிவதும் உமக்கு மாபெரும் மகிழ்ச்சியே. நம்பிக்கையோடு உம்மை நாடி வரும் பலர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர். அவர்கள் கேட்ட மன்றாட்டுக்களையும் நிறைவாய் அடைந்துள்ளனர். உமது அற்புத திரு உருவத்திற்கு முன் முழந்தாளிட்டு, என் இதயத்தைத் திறந்து, என் விண்ணப்பங்களையும், மன்றாட்டுக்களையும், ஏக்கங்களையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்.


(உங்கள் தேவைகளை உறுதியோடும் நம்பிக்கையோடும் இப்போது குறிப்பிடவும்)


அற்புதக் குழந்தை இயேசுவே! உமது திரு உளப்படி எனக்கு ஆகட்டும். உமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப, என் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன். இத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக இருந்து, மகிழ்ச்சியை அளிக்க இரக்கம் கொள்ள வேண்டும் என்று உம்மை நோக்கிப் பணிவோடு மன்றாடுகிறேன்.


நோய் வேளையில் மன்றாட்டு:

இரக்கமுள்ள அற்புதக் குழந்தை இயேசுவே! நோயாளிகளுக்கு நீர் காட்டிய இரக்கத்தை நான் அறிவேன். இவ்வுலகிலே நீர் மனிதனாக வாழ்ந்த போது, நோயாளிகளையும், உடல் குறை உள்ளவர்களையும், தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டுக் குணமாக்கினீர். இன்று, உமது திரு உருவத்தை நாடி வரும் ஆயிரக்கணக்கான மக்கள் கொடூரமான, படுமோசமான நோய்களிலிருந்து உம்மால் அற்புதமாகக் குணமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். அற்புதக் குழந்தை இயேசுவே! நான் ஒரு பாவி. துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன். உமது இரக்கத்தைப் பெறத் தகுதியற்றவன் என்று எனக்குத் தெரியும். ஆயினும், எண்ணற்ற வரங்களையும், நோய்களை நீக்கும் அற்புத குணங்களையும், மாபெரும் பாவிகளுக்குக்கூட நீர் மனமிரங்கி அளித்து வருகின்றீர். ஆகையால், என்னையும் நீர் குணமாக்க வல்லவர் என்று நான் இன்னும் அதிகமாக நம்புகிறேன். விண்ணக மருத்துவரே! இந்த (உங்கள் நோய்களைக் குறிப்பிடுக) நோய்களிலிருந்து நான் குணமடைய வேண்டும் என்பதற்காக, உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும். எல்லா நோய்களையும், வலிகளையும் நீக்கி என்னைக் குணமாக்கியருளும். நான் பெற்ற உடல் சுகத்திற்கு மூலகாரணம் மருந்தல்ல, எல்லாம் உமது வல்லமையுள்ள தெய்வீக ஆற்றல் என்பது எல்லோருக்கும் தெரியும்படி எனக்கு சுகமளித்தருளும்.


ஆய்ந்தறிய முடியாத உமது ஞானத்திற்கேற்ப, எந்த நிலையிலும் உமது திரு உளப்படியே எனக்கு ஆகட்டும். நல்லதொரு ஆன்ம நலனையும் எனக்கு அளித்தருளும். இந்த நோயால் நான் துன்புறுகையில், உமது ஆறுதலின் இனிய அமுதம் என் மேல் வழிந்தோடட்டும். இவ்வுலகத் துன்பமெல்லாம் கொஞ்ச நாளுக்குத்தான் என்ற உயர்ந்த உண்மை என் உள்ளத்தை நிரப்பட்டும். அன்பும், இரக்கமும் உள்ள அற்புதக் குழந்தை இயேசுவே! துன்பங்களைத் திடமனத்துடன் நான் சகித்துக் கொள்ளவும், உமது திரு உளத்திற்குப் பணிந்து நடக்கவும் எனக்கு வரம் தாரும். ஓ அற்புதக் குழந்தை இயேசுவே! என்னை ஆசீர்வதியும். இந்த நோயால் நான் படுத்தபடுக்கையாகி விட்டாலும், நிலைவாழ்வை நீர் எனக்குத் தந்தருளும். உமது பேரன்பை நான் என்றென்றும் போற்றிப் புகழ அருள் தாரும். ஆமென்.


வல்லமையுள்ள குழந்தை இயேசு செபம்:

அற்புதக் குழந்தை இயேசுவே! உம்மை அன்புடன் ஆராதித்து, எனது துயரங்களை உம்முடன் பகிர்ந்து கொள்ள தாழ்மையான உள்ளத்தோடு உம்மிடம் வந்திருக்கிறேன். எனக்குத் தேவையான உதவிகளை அன்புடன் தருவீர் என்னும் பெரும் நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன். ஏனெனில், உம்மால் இயலாதது ஒன்றுமில்லை. பாவத்திலிருந்தும், சாத்தானின் அடிமைத் தனத்திலிருந்தும் எங்களை மீட்கும்படி நீர் மனித உரு எடுத்து, எங்கள் மேல் உள்ள அன்பால், உம்மையே நீர் தாழ்த்திக் கொண்டீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, “தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் உளப்படி அல்ல, உம் திரு உளப்படியே ஆகட்டும்” என்று நீர் உமது இறப்பின் வேளையிலே உம் தந்தையை நோக்கிச் சொன்னதையே நானும் சொல்கிறேன். சிறு பிள்ளைகளுக்கு உமது அரசைத் தருவதாக வாக்களித்தீரே. சிறுமை நிறைந்த என்னையும் கண்ணோக்கிப் பாரும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றியருளும். இதனால் நான் உமது நட்புறவில் என்றென்றும் நண்பனாக வளர்வேன். இதே நட்புறவை விண்ணகத்திலும் அனுபவிக்க அருள் தாரும். ஆமென்.



Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு