செவ்வாய்க்கிழமை காலைச் செபம்
தேவ ஆராதனை
நம்மைப் படைத்துக் காத்து இரட்சித்துப் பரிபாலனம் செய்துவரும் பிதா சுதன் இஸ்பிரித்து சாந்து என்னும் பரம் திரித்துவத்திற்கு எல்லாப் படைப்புகளாலும் அனவரதகாலம் ஸ்துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது. திரி.
தளங்களுக்குக் கர்த்தரான தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தராயிருக்கிறார். அவரது மகிமைப் பிரதாபத்தால் பூமி நிரம்பியிருக்கின்றது. பிதாவுக்கும் ஸ்தோத்திரம் சுதனுக்கும் ஸ்தோத்திரம், இஸ் பிரித்து சாந்துவுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.
இதோ இராக்காலம் தனது திரையை மடக்கிக்கொண்டு மறைய, விடியற்காலம் வர, காலைக் கிரகம் கம்பீரமாய்த் தோன்றப் போகின்றது. இதோ உமது கைப் படைப்பாகிய நான் படுக்கையை விட்டெழுந்து பயபக்தி வணக்கமுற்று இருகரங் குவித்து ஆத்தும் சரீர ஒடுக்கத்தோடு உமது தெய்வச் சந்நிதியில் வருகிறேன்.
சுயம்பு அநாதி அசரீரியே மட்டற்ற நன்மைக் கடலே , சர்வ வியாபியே, சர்வ லோக சிருஷ்டிகராய் இருக்கின்ற என் தேவனே, வானத்தில் சந்திரன், சூரியன், நட்சத்திரங்களும், பூமியில் மலைகள், சமுத்திரம் முதலிய காரியங்களும் தேவரீருடைய மகிமையைக் காட்டிக் கொண்டிருப்பதை நான் பார்த்தும், நான் ஆத்துமத்திலும், சரீரத்திலும் கொண்ட நன்மைகளை யோசித்தும் உள் நடுக்கங் கொண்டு உமது பாதத்தில் விழுந்து உடம்மைப் போற்றிப் புகழ்ந்து நமஸ்கரித்து நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.
பரலோகத்தில் சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் உம்மை வாழ்த்தி ஸ்துதிக்கிறாப்போல நானும் செய்ய ஆசிக்கிறேன். இந்நாளிலும் என்னை உலகில் வைக்கச் சித்தமான கடவுளே! சகல பரிசுத்தத் தனத்திற்கும் ஊருணியே, உலகில் உமக்குச் செய்யப்படும் பலிகளையும் செபங்களையும் கண்டு களிகூறுகிறேன்.
இரவையும் பகலையும் உண்டுபண்ணி, இருளை விட்டு ஒளியைப் பிரிக்கிற சர்வேசுரா, நான் இன்று பாவங்களினின்று விலகி பாச மாயைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு எனக்கு நீர் தந்த ஆத்தும சரீரப் பலன்களால் கூடுமானமட்டும் நான் உம்மோடு ஐக்கியமாகி எனது நினைப்பு சித்தம் கிரியைகள் யாவற்றையும் உமக்கு ஒப்புக் கொடுத்து உமது கற்பனைகளை பூரணமாய் அனுசரித்து உமக்கு இன்று நல்ல ஊழியம் செய்ய வெகு ஆசையாயிருக்கிறேன்.
அநித்தியமான காலத்தில் என் பொறிகளாலும் பசாசின் தந்திரங்களாலும் உலக மாயைகளாலும் நான் மோசம் போகாமல் உமது பிரகாசக் கதிரைத் தாராளமாய் எனக்குத் தந்தருளும். இரவு போய்ப் பகல் வந்தது போல் நான் உமது இஷ்டப் பிரசாதத்தைக் கொண்டு பாவத்தை முழுதும் விட்டுப் புண்ணிய பாதையில் நடக்க உமது ஒத்தாசையைக் கட்டளை செய்தருளும் சுவாமி. நீர் எனக்குக் கொடுத்த தத்துவங்களை நான் காலத்தில் நன்றாய்ப் பயிற்சி செய்து உம்மால் வரும் சாமர்த்தியத்தால் பரலோகம் வந்துசேர அனுக்கிரகம் செய்தருளும்.
மாதா வணக்கம்
எப்போதும் கன்னிகையே, தேவ மாதாவே, பரலோக பூலோக இராக்கினியே, இந்தக் காலை நேரத்தில் மெத்த பக்தி வணக்கத்துடனே இருகரங் குவித்து எனக்குள் ஒடுங்கி உமக்கு விசேஷ ஆராதனை செய்கிறேன். வேத பொக்கிஷங்களைக் கொண்ட நாயகியே, அக்கினியொத்த தேவசிநேகத்தாலும் அத்தியந்த தாழ்ச்சியாலும் தேவ வரப்பிரசாதங்களாலும் நிரம்பிய தாயே , மாசின்றிப் பிறந்து மனுக்குலத் தவிப்பை நீக்க உலக இரட்சகரைப் பெறப் பாக்கியம் பெற்ற ஆண்டவளே, இன்று நான் உலகில் சஞ்சாரம் செய்த என் கிரியைகளை நடத்தும்போது நான் காமக்குரோதம், வெகுளி, மயக்கம் எனப்பட்ட தோஷ மாயைகளில் மாட்டிக்கொண்டு என்னை உண்டுபண்ணின் சுவாமிக்குத் துரோகியாய்ப் போகாமல் இன்று நான் தாழ்ச்சி, பொறுமை, தேவசிநேகம், பிறர் சிநேகம் கொண்டு, உலகம் பசாசு இதே முதலிய சத்துருக்களைச் செயித்து, அறநெறியில் உயர எனக்காக உமது திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும்.
அர்ச்சியசிஷ்டவர்களின் வணக்கம்
கண்களின் பாச விகாரங்களையும், சரீர பாச விகாரங்களையும், சீவிய பாச விகாரங்களையும் விரத்தத்துவத்தோடு வென்ற மோட்சவாசிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, நீங்கள் சர்வேசுரனுக்கு உகந்தவர்களாயிருப்பதனாலே நான் இன்று என் கடமைகளைச் செய்கையில் ஐம்புலன்களின் தந்திரங்களாலும், பசாசின் சோதனைகளாலும் வரும் பொல்லாப்புகளினின்று விலகி, நான் வழக்கமாய் விழும் பாவங்களில் விழாமல் அனல் கொண்ட தேவ நேசங்கொண்டு, நேரிடும் வருத்தங்களைத் தைரியத்தோடும் விசுவாசத்தோடும் செயித்து நித்திய காலத்திற்குப் பெறவேண்டிய பேறுகளைப் பெற எனக்காக ஆண்டவரை வேண்டிக் கொள்ளுங்கள். என் காவலான சம்மனசானவரே, என்னை உண்டுபண்ணிக் காப்பாற்றி எண்ணிறந்த உபகாரங்களைச் செய்துவரும் சர்வேசுரனுக்கு என் துர்ப்பழக்கத்தாலும், பாச விரைவாலும், நான் மோசஞ் செய்யாமல் ஒறுத்தல், உபவாசம், செபதவம், நற்கிரிகை, தயை, பொறை இவை முதலிய புண்ணியங்களால் நான் அவருக்குப் பிரியப்பட எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும்.
பின் கர்த்தர் கற்பித்த செபம், அருள் நிறைந்த மந்திரம், விசுவாச மந்திரம், பத்துக் கற்பனை, உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லவும்.
Comments