திங்கட்கிழமை மாலைச் செபம்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே, ஆமென்.

சர்வேசுரன் சத்தியமாயிருக்கிறபடியால் அவரை விசுவசிக்கிறேன், சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ளவராயிருக்கிற படியினாலே அவரை நம்புகிறேன், சர்வேசுரன் சகல நன்மையாயிருக்கிறபடியினாலே அவரை முழு மனதோடு நேசிக்கிறேன்.

திரிகாலச் செபம் செபிக்கவும்பர.அருள் விசுவாச மந்திரம்.

ஆனந்த சந்தோஷங் கொண்டு பரலோகத்தில் இருக்கிற சம்மனசுகளே! பூமண்டலத்தில் இருக்கிற சகலமான படைப்புகளே! ஆண்டவரைத் துதித்து நமஸ்காரம் செய்ய என்னுடனே வாருங்கள்.

ஆண்டவரே! நான் என் பாவங்களைச் சங்கீர்த்தனஞ் செய்து கொண்டு நீர் எனக்குச் செய்த எண்ணிறந்த உபகாரங் களைப் புத்தியில் நினைத்துக் கொண்டு பய பக்தியோடே நடுநடுங்கித் தூசியோடு தூசியாய் உமது தெய்வ சந்நிதியிலே விழுந்து உம்மை ஆராதித்து நமஸ்காரம் செய்கிறேன்.

ஆண்டவரே! நீரே பெரிய தேவனுமாய், என்னை உண்டு பண்ணினவருமாய், உண்மையின் உப்பரிகையுமாயிருக்கிறீர். உலகத்தின் பேரில் இருக்கப்பட்ட சகல மனிதர்களுக்கும் அமுது கொடுத்து அவர்கள் பாவங்களை அடிக்கடி பாராட்டாமல் பொறுத்து ஆண்டு வருகிறீர்.

பூமியின் ஆழங்களையும் உமது திருக்கண்கள் பார்க்கின்றன. சமுத்திரமும் உம்முடையது, வெட்டாந் தரையையும் உமது கரம் உருவாக்கினது. நீர் என்னுடைய கடவுள், நான் உமது சிருஷ்டிப்பும், உமது மேய்ச்சலின் ஆடுமாயிருக்கிறேன்.

நீர் என்னை உருவாக்கின நாள் முதற்கொண்டு இதுவரைக்கும் என் பாவங்களினாலே நான் நரகத்தில் விழாமற் காப்பாற்றி உமது அணை கடந்த இரக்கத்தால் எனக்குச் செய்த உபகாரங்களுக்காகவும், விசேஷமாய் இன்று செய்த நன்மைகளுக்காகவும் என் சத்துவங் கொண்ட மட்டும் அன்போடு பணிந்து உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

இதுவரையில் என் சொந்தத் துர்ப்பலத்தினாலேயும், புத்தியின் கெடுதியினாலேயும், பாவப் பழக்கங்களினாலேயும் நானே எனக்குத் தேடிக்கொண்ட ஆபத்திலிருந்து இரட்சித்ததற்காக உம்மை வாழ்த்தித் துதிக்கிறேன்.

இந்த இராத்திரி வரையிலே என் பாவங்களுக்குச் சரியான தண்டனை இடாமல் என்னை நிலைநிறுத்தி உயிர் வாழ வைத்ததற்காக உமது தெய்வ சந்நிதியிலே என் ஐம்புலன்களையும், என் இருதயத்தையும் உமது பாதத்தில் வைத்து உம்மை வாழ்த்திப் போற்றிப் புகழ்ந்து என் நீசத்தனத்துக்குத் தக்க பிரகாரம் உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

நான் இனி வாழப் போகிற வாழ்நாட்களையும், அதில் செய்யப்போகிற கிரியைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். உலகத்தில் தரும் ஆத்துமாக்கள் செய்யும் செப் தவப் புண்ணியங்களையும், உலகத்தில் பலி பீடங்களில் உமக்கு இடப்படுகிற உன்னதமான தெய்வ பூசைகளையும் நமஸ்காரம் பொருந்திய நைவேத்தியங்களையும் இதன் நிமித்தமாகவே உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நான் தேவரீருக்குச் செய்யவேண்டியதுமாய், என் நிற்பாக்கியத்தின் நிமித்தம் என்னால் செய்யக்கூடாததுமான கடமைகளுக்காகப் பரலோகத்தில் உமது தெய்வ சந்நிதானத்திலே உமது தூதர்கள் உமது பாதத்திலே வைக்கும் காணிக்கைகளை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

இதுவரையில் என்னைக் காப்பாற்றினது போல் இந்த இராத்திரி காலத்திலும் என்னைக் காப்பாற்ற மிக்க பக்திப் பற்றுதலோடு உம்மைப் பார்த்து மன்றாடுகிறேன். வெளி ஆபத்துகளிலிருந்தும், துர்க்கனவு முதலான சோதனைகளிலிருந்தும் என்னை இந்த இராக் காலத்தில் இரட்சித்தருளும்.

என்னைப் படைத்த பிதாவே! எனக்கு உமது திருக்கர ஆசீர்வாதம் தந்தருளும். தேவ சுதனே! என்னைக் கையேற்றுக் கொள்ளும், என்னை ஆதரித்துக் காப்பாற்றும். இஸ்பிரித்து சாந்துவே! என்னைச் சகலமான ஆபத்துகளினின்று காப்பாற்றியருளும்.

அர்ச். தேவமாதாவே! பாவிகளுக்கு அடைக்கலமே, என் நல்ல தாயே! எனக்காக அடைந்து தந்த உபகாரங்களுக்காக உம்மைப் பூசித்து உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

சகல சம்மனசுக்களே! சகல மோட்சவாசிகளே! உங்களை நமஸ்கரித்து இந்த இரவில் எனக்கு ஒத்தாசையாக வர உங்களை மன்றாடுகிறேன்.

என் காவலான சம்மன சானவரே! என் பேர் கொண்ட அர்ச்சியசிஷ்டவரே! (பெயரை உச்சரிக்கவும்) உங்களை நமஸ்கரிக்கிறேன்; இந்த இராத்திரி காலத்தில் எனக்கு உதவியாக வாருங்கள். - ஆமென்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு