புனித அந்தோனியாரை நோக்கி ஜெபம் - ST ANTONY PRAYER
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, இறைவனுக்கு ஏற்ற ஊழியரே, குழந்தை இயேசுவை கையில் ஏந்தப் பேறுபெற்ற துயரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த மறைக் பணியாளரே, தப்பறைகளை உடைத்தெறிந்த மறை வல்லுநரே, இறைவனின் தனி அருளால் பசாசுகளை ஓட்டியவரே, துன்பப்படுவோரின் துயரைப் போக்குபவரே, பாவிகளாகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்!
எங்கள் ஆதரவு நீரல்லவோ? தவறி விழும் எம்மைக் கை தூக்கி, இறைவனிடம் விட்டு செல்பவர் நீரல்லவோ? எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பேரின்பமுமான இறைவனிடம் பரிந்து பேசுபவர் நீரல்லவோ? உம்மை அண்டி வந்த உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்!
அழுவோரின் கண்ணீரை துடைத்தருளும்! நோயாளிகளுக்கு உடல் நலம் பெற்று தந்தருளும்!
நீர் பாராமுகமாய் இருந்தால் நாங்கள் யாரை அண்டிச் செல்வோம்? ஆண்டவரிடம் நீர் எங்களுக்காகப் பரிந்து பேச மறுத்தால் நாங்கள் யாருடைய உதவியை நாடுவோம்? புதுமை வரம்பெற்றிருக்கும் எம் ஞானத் தந்தையே, உம் ஆதரவை நாடி வந்திருக்கும் உம் பிள்ளைகளின் மன்றாட்டுக்களைப் புறக்கணிப்பீரோ? பல்வேறு துன்பங்களினால் வாடி வந்திருக்கும் எங்கள் கூக்குரலுக்கு செவிசாய்க்க மாட்டீரோ? நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடோடி வந்திருக்கிறோம்; எங்கள் நம்பிக்கை வீணாகுமோ?
எங்கள் அன்புக்குரிய அந்தோனியாரே! நீர் எப்பொழுதும் இறைவனின் திருவுளப்படி நடந்து வந்தது போல, நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும், வெற்றியிலும் தோல்வியிலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடப்போமாக. நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்கள் குடும்பத்தில் ஒருவர் ஒருவருக்கு வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் அன்பில் வளருவோமாக. திருச்சபையின் முன்னேற்றத்திற்கும் நாட்டு நல்வாழ்வுக்கும் நேர்மையுடனும் தூய்மையுடனும் உழைப்போமாக. அனைவரும் மெய்யங் கடவுளைக் கண்டறிந்து தக்கமுறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை மன்றாடியருளும்.
எங்களையும், எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும் உழைப்புகளையும் ஆசீர்வதித்தருளும்! எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.
Comments