திங்கட்கிழமை காலைச் செபம்

நித்திய பிதாவே என் பாவங்களின் மன்னிப்புக்காகவும் திருச்சபையின் அவசரங்களுக்காகவும் சேசுகிறீஸ்துநாதருடைய திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

இதோ இருளின் திரை நீங்கப் பிரகாசக் கிரகம் தோன்றுகின்றது. பரலோக பூலோக பாதாளம் எனப்பட்ட மூன்று உலகங்களிலும் அடங்காத தேவாதி தேவனே! நான் இருகரங் குவித்து மொத்தத் தாழ்ச்சியோடு உம்மை நமஸ்கரிக்கிறேன்.

சர்வ இன்பத்தின் ஊருணியே நித்திய சந்தோஷத்தின் வெள்ளமே! நான் உம்மை ஆவலாய்த் தாவி வணங்குகிறேன். தேவரீர் பழைய ஏற்பாட்டிலும் புது ஏற்பாட்டிலும் சொல்லியதெல்லாம் உயிர் மூச்சாய் விசுவசிக்கிறேன்.

என் ஏக நித்திய ஆஸ்தியே! என்னை உண்டுபண்ணின கர்த்தரே உமது பேரில் நான் கொண்டிருக்கிற அன்பினால் உமது பாதத்தில் உயிரைவிட ஆசிக்கிறேன். என் ஏக நம்பிக்கையே! என் நல்ல இராசாவே! தேவரீருடைய தோத்திரத்திற்காக என் இரத்தமெல்லாம் சிந்த ஆசிக்கிறேன்.

நீர் எனக்குச் செய்த எண்ண முடியாத நன்மைகளுக்காக நான் தூசியோடு தூசியாய்த் தாழ்ந்து, பய பக்தி பட்சத்துடனே உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். சம்மனசுகளோடும், அர்ச்சியசிஷ்டவர்களோடும் தேவரீரைத் துதிக்க ஆசிக்கிறேன்.

உலகத்திலுள்ள சகலத்தையும் விட்டு உம்மை உறுதுணையாய்க் கைக்கொள்ள விருப்பங் கொள்ளுகிறேன். என் ஐம்புலன்களின் பலமெல்லாம் கொண்டு, புத்தி மனது நினைவை முழுதும் உபயோகஞ் செய்து தேவரீரை என் கண்ணால் கண்டாற்போல் உமது பாதத்தில் விழுந்து உமது சமுகத்திலே மகிழ்ந்திருக்க தேடுகிறேன்.

படைக்கப்பட்ட வஸ்துகள்பேரிலே நாடுகிற நாட்டத்தை விட்டு, சீவிய ஊருணியாகிய உம்மையே நோக்கி நாடுகிறேன். பூலோகத்திலுள்ள வஸ்துக்களைக் கொண்டு உம்மைத் துதிக்கிறேன்.

சகல யுகங்களின் கர்த்தரே! பூலோக ஆரம்பம் தொடங்கி இதுவரையில் செய்யப்பட்டதும், இனி செய்யப்படப் போகிறதுமான பலிகளையும் துதிகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். ஊர்வன, நடப்பன, பறப்பனவற்றோடு உம்மை வாழ்த்தி உம்மில் உறைய ஆசைப்படுகிறேன்.

இன்று நான் யாதோர் பாவத்தில் விழாமல் இருக்கச் செய்தருளும் சுவாமி. தந்திர மயக்கங்களில் நின்று என்னை மீட்டருளும். எனது கிரியைகள் நினைப்புகள் யாவும் உமது ஊழியத்தில் செலுத்தப்பட அனுக்கிரகம் செய்தருளும்.

நான் உம்மில் மூழ்கிப்போகவும், உமது வரப்பிரசாதங்கள் என் இருதயத்தில் ஏராளமாய்ப் பாயவும் செய்தருளும். உபவாச ஒறுத்தலால் நான் உமது திருக் கற்பனைகளை அனுசரிக்கச் செய்தருளும்.

என் சந்தோஷ வெள்ளமே! எனக்குத் திருப்தியான ஆஸ்தியே! என் ஆனந்த மோட்சமே! வேதம் என்னிடம் வந்து உறையவும், உமது இஸ்பிரீத்து சாந்து சம்பூரணமாய் எனக்கு அகப்படவும், உலக காரியங்கள் எனக்குக் கசப்பாகத் தோன்றவும் செய்தருளும் சுவாமி.

நான் இந்நாளிற் செய்யும் தருமங்களையும், உயிர் மூச்சையும் நடக்கும் நடக்கைகளையும், நினைக்கும் நினைவுகளையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

ஆகாசத்தில் அண்ட கோளங்களும், பூமண்டலத்தில் சமுத்திரங்களும், பாதாளத்தில் அரும் பொருள்களும் உம்மால் அசைவு பெற்று உமது சித்தப்பிரகாரம் ஆகிறது போல் என் சித்தம், புத்தி, ஞாபகம், ஐம்புலன்கள் யாவும் உம்மில் ஆடச் செய்தருளும்.

மோட்சத்தில் தேவமாதா, சம்மனசுகள், அர்ச்சியசிஷ்டவர்களால் உமக்கு எம்மாத்திரம் புகழ் உண்டாகின்றதோ, பூலோகத்தில் நடக்கும் தேவ பலிகளாலும், அருந்தவத்தோருடைய செங்களாலும் உமக்கு எவ்வளவ தோத்திரம் உண்டாகின்றதோ அம்மாத்திரம் வணக்கம், துதி, நீச வஸ்துவாகிய என்னால் இன்று உமக்கு உண்டாக ஆசிக்கிறேன்.

என் புத்தி நினைவு கொண்ட மட்டும் உம்மை எனக்குள் அடக்கி அனுபவிக்க அணை கடந்த விருப்பங்கொள்ளுகிறேன். பளுவுள்ள மாமிசத்தோடும், விகாரங்கொண்ட தத்துவங்களோடும் இப்பாக்கியம் எனக்குக் கிடைக்காதென்கிறதினால் என் உயிரை விட்டாகிலும் உம்மில் மூழ்கி ஆனந்த வெள்ள வாரியாகிய உம்மில் அமிழ ஆசிக்கிறேன்.

கருணாகரக் கடவுளே! எண் கடந்த இலட்சணமுள்ள சர்வேசுரனே! என் ஏக நம்பிக்கையே! கடந்த காலத்தில் நான் செய்த தப்பறைகளை மன்னியும். நான் உமது அருளைக் கொண்டு செய்த அற்பப் புண்ணியங்களை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். நீர் செய்த சகல உபகாரங்களுக்கும் கைம்மாறாக உமது நேச திருக்குமாரனின் பேறுபலன்களை எல்லாம் எனது சொந்த ஆஸ்திபோல் எடுத்து உமக்களிக்கிறேன்.

நிகழ்காலத்தில் விசேஷமாய் இன்று நான் செய்யும் நற்காரியங்களை எல்லாம் உமது திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்கிறேன். இன்று எனக்கு யாதோர் ஆபத்தும் வராமல் காத்தருளும் சுவாமி. எதிர்காலத்தில் என்ன வருமோ அறியேன். என் துர்ப்பலத்தால் வருங்காலத்தில் நான் மோசம் போகாமல் என் ஆயுள் முழுதும் நான் உமது ஊழியத்தில் காலங் கழித்து வரும்படி அனுக்கிரகித் தருளும்..

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு