நோயில் புனித செபஸ்தியாரிடம் வேண்டுதல் - saint sebastian prayer
போர் வீரராகி உரோமை அரசினால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் தரவும், மறைசாட்சி முடி பெறவும் பேறு பெற்றவரான புனித செபஸ்தியாரே, என் பேரில் இரக்கமாயிரும். பாவியின் சாவை விரும்பாமல் அவன் மனம் திரும்பி நலம்பெற விரும்பும் இறைவன், பாவிகள் மனந்திரும்பவும், நல்லவர்கள்மேலும் புனிதப்படவும், வைசூரி, பேதி, பெருவாரிக்காய்ச்சல் முதலிய நோய்களை அனுப்புகிறார் என்பதையறிவேன். இந்த நோயில் உமது உதவியை கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பெயரால் பீடம் எழுப்பிய பின்னரே நச்சுக் காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.
தியோக்கிளேசியன் அரசனுக்கு அஞ்சாமல் வலிய மறைச்சாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த இன்னல் மிக்க நோயில் என்னைக் கைவிடாதேயும். என்னைப் புனிதப்படுத்த வந்த இந்த நோயை நான் பொறுமையோடே சுமக்க விரும்புகிறேன். நானோ வெகு பலவீனன். காற்றால் அடிக்கப்பட்ட சருகு போலிருக்கிறேன். கடலில் கிடைக்கும் துரும்பு போல் தத்தளிக்கிறேன். இறைவனுடைய சினத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் பருகவேண்டுமென்று இறைவன் மனதாயிருக்கிற இந்த துன்பக் கிண்ணத்தை நான் வீரம் பொருந்திய கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே இறைவன் அனுமதித்து, என்னை சோதிக்கிறார். நான் இன்ப நாளில் அவரை அன்பு செய்கிறதுபோல், துன்ப நாளிலும் அவரை அன்பு செய்வேனாக. நான் இந்த நோயில் அலையுண்டு கலங்காதடி இந்தக் கசப்பான கிண்ணத்தை மகிழ்ச்சியோடு அவர் திருக்கையிலிருந்து வாங்கிப் பருக எனக்கு வேண்டிய துணிவைத் தந்தருளும்.
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் எங்களை மறக்காதே இறைவன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய நோய்களையும், வறுமை, போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் அன்பு மிகுதியால் அனுப்புகிறார். ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த நோய் விரைவில் குணமாக இறைவன் திருவுளமாகாவிட்டால், நான் அதை நல்ல மனத்தோடு பொறுக்க எனக்கு துணிவையாகிலும் தர மன்றாடும். - ஆமென்.
Comments