புனித சூசையப்பருக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் - ST JOSEPH PRAYER
மகிமை நிறைந்த முதுபெரும் தந்தையாகிய புனித சூசையப்பரே! இறையன்னையின் புனித கணவரே, இயேசு கிறிஸ்துவை வளர்த்த தந்தையே, உம்மை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே, நன்மரணத்துக்கு மாதிரிகையே, உம்முடைய தாசராயிருக்கிற நாங்கள் எங்களை முழுதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
மூவொரு இறைவனுடைய சமூகத்திலே, உம் திவ்விய மைந்தனான இயேசு, உம் புனித துணைவி, அனைத்து விண்ணுலகவாசிகள் ஆகியோர் முன்னிலையில் மிகுந்த வணக்கத்துடன் உம்மை எங்களுக்குத் தந்தையாகவும், அடைக்கலமாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்.
உமக்கு எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம். உமது மகிமையைக் கொண்டாடி உமக்குரிய வணக்கத்தை அறிக்கையிட்டு ஒரு நாளாவது உமக்குத் துதியையும் வேண்டுதலையும் செலுத்தாமல் இருக்கப் போகிறதில்லை.
நீரும் இடைவிடாமல் எங்களை நினைத்து எங்களுடைய இடையூறுகளை விலக்கி எங்களை அறநெறியிலே வழுவாமல் நடத்தியருளும். இயேசு, இறையன்னை ஆகியோரின் திருக்கைகளில் இறக்க பேறுபெற்ற நீர், நாங்கள் திருவருளோடு இறந்து விண்ணுலகப் பேற்றை அடைந்து, உம்முடனே என்றென்றைக்கும் வாழச் செய்தருளும். - ஆமென்.
புனித சூசையப்பரைக் குறித்து மன்றாட்டு :
தயைமிகுந்த முதுபெரும் தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை மன்றாடி உம் அடைக்கலத்தைத் தேடி உம்மிடத்தில் தாம் இரந்து கேட்டதை அடையாமற் போனதில்லை என்று புனித தெரசம்மாள் உறுதியாகக் கூறியதை நினைத்தருளும். என் அன்புள்ள தந்தையே! இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு நான் உம்முடைய திருவடியை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து அழுது பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது திருமுன் பணிகிறேன். மிகவும் இரக்கமுள்ள புனித சூசையப்பரே! எம் மன்றாட்டை புறக்கணிக்காமல் கருணையோடு கேட்டுப் பெற்றுத் தந்தருளும். - ஆமென்.
Comments